Monday, February 15, 2010

நவநீதம்பிள்ளையின் கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் பதிலளிக்க முடியாது

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள கோரிக்கைக்கு பதிலளிக்க முடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

இது உள்நாட்டு விவகாரம் என்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை புரிந்துகொள்ளவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் தனிப்பட்டவர்களின் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியாது என்பதனை தெரிவிக்கவேண்டும்.

அடுத்த விடயம் யாதெனில் யாரும் கோரிக்கைகளை விடுக்கலாம். பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் கோரிக்கைகள் விடுக்கப்படலாம். ஆனால் எமது கைகளிலேயே விடயங்கள் உள்ளன. இது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்பதனை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

யுத்தம் முடிந்தவுடன் இலங்கையில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்கள் அவற்றுக்கு பதிலளித்தோம். அவை அந்த சந்தர்ப்பங்களில் முடிவுக்கு வந்தன.

மேலும் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற இலங்கை விவகாரம் தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை அமோக வெற்றியீட்டியதையும் நினைவூட்டுகின்றோம்.

நிலைமை இவ்வாறு இருக்கும்போது தற்போது மீண்டும் போர்க் குற்றங்கள் மற்றும் சுயாதீன விசாரணைகள் என்று கோரிக்கை விடுக்கப்படும்போது அவற்றுக்குப் பதிலளிக்க முடியாது என்றார் யாப்பா.

No comments:

Post a Comment