Thursday, January 28, 2010

பொன்சேகா சுற்றிவளைப்பு-கொல்ல ராஜபக்சே சதி என்கிறார்

என்னைக் கொலை செய்து விடும்படி ராணுவத்தினருக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். எனவே எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் தோல்விமுகத்தில் இருக்கும் பொன்சேகா கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனது பாதுகாவலர்களுடன் தங்கியுள்ளார். இந் நிலையில் இந்த ஹோட்டலை ராணுவத்தினர் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ளனர். தேர்தல் தோல்வியால் பொன்சேகா தப்பிப் போய் விடாமல் தடுப்பதற்காகவும், முடிவு வெளியானவுடன் அவரைக் கைது செய்யும் திட்டத்துடனும் ராணுவத்தை ராஜபக்சே குவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந் நிலையில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பொன்சேகா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபர் தேர்தலில் ராஜபக்சே பெருமளவில் முறைகேடுகளைச் செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானவுடன் என்னைக் கொலை செய்து விடும்படி ராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தான் எனது ஹோட்டலைச் சுற்றி ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இங்கு தங்கியிருப்போரையும், அருகில் உள்ள பொதுமக்களையும் வெளியேறுமாறும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர். எனது உயிருக்கு ராஜபக்சேவால் தற்போது பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பாதுகாப்பு அளிக்கவே ராணுவம்-அரசு: இந் நிலையில் பொன்சேகாவின் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது. பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அளிக்கவே அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment