Thursday, January 28, 2010

ராஜபக்ஷ வெற்றி: இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு


இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் முக்கிய போட்டியாளரான ஜெனரல் சரத் பொன்சேகா, இந்த முடிவுகளை தான் ஏற்கவில்லை என்றும் அவற்றை தான் எதிர்க்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். பதிவான வாக்குகளில் 58 சதவீதமானவை ராஜபக்ஷவுக்கு விழுந்திருப்பதாக அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை சரியானது அல்ல, இந்த முடிவுகள் ரத்துசெய்யப்படும் நோக்கில் சட்ட நடவடிக்கைகளைத் தான் தொடுக்கவிருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தான் எழுதிய கடிதத்தில் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளளார். தமிழர்கள் உள்பட சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய ஓய்வு பெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா முன்னிலை பெற்றிருக்கிறார். தென் இலங்கையில் அவரது சொந்தத் தொகுதியான அம்பலாங்ககொடவில் மஹிந்த ராஜபக்ஷ அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறார். தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை ராஜபக்ஷ பெற்றிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆரம்பகட்ட தேர்தல் முடிவு நிலவரங்களைப் பார்க்கும்போது, எதிர்க்கட்சி வேட்பாளரான ஜெனரல் சரத் ஃபொன்சேகா, சிங்கள வாக்காளர்களின் வாக்குகளைப் பிரிக்கத் தவறிவிட்டதாகவே தெரிகிறது என கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் சார்லஸ் ஹவிலண்ட் கூறுகிறார்.

No comments:

Post a Comment